வெளிநாடு வாழ் இந்தியர் தின மாநாட்டில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 27 பேருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கியுள்ளார்.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி 9ஆம் திகதி வெளிநாடுவாழ் இந்திய தின விழாவாக கொண்டாடப்படுகிறது. இதற்கமைய 18ஆவது வெளிநாடு வாழ் இந்தியர் தின விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் கடந்த 3 நாட்கள் விசேட மாநாடு நடைபெற்றது.
இதன் இறுதி நாளான நேற்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்றார். அப்போது அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் 27 இந்திய வம்சாவளியினருக்கு குடியரசுத் தலைவர் முர்மு விருதுகளை வழங்கினார்.
அமெரிக்காவில் வசிக்கும் காக்னிசன்ட் தலைமை செயல் அதிகாரி ரவி குமார், ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு தொழில்களை நடத்தும் இராமகிருஷ்ணன் சிவசுவாமி அய்யர், மலேசியாவை சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.
“2047ஆம் ஆண்டு 100ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவோம். அதற்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்கு வெளிநாடுவாழ் இந்தியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.” என மாநாட்டில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
“வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தங்கள் தாய்மண்ணை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். அந்தந்த நாடுகளில் இந்திய வம்சாவளியினர், நமது நாட்டின் கலாச்சாரத்தை பரப்ப வேண்டும்.
“உலகம் ஒரு குடும்பம் என்ற கொள்கையை இந்தியா பின்பற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சர்வதேச அரங்கில் தெற்கு நாடுகளின் நலனுக்காக இந்தியா தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. உலகத்தின் கலங்கரை விளக்கமாக இந்தியா திகழ்கிறது.” என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். (Hindutamil with minor changes)
